அமர்நாத் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர். அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமர்நாத்தின் கதை உலகம் அலாதியானது. மனிதர்கள் பால் கொண்ட பேரன்பின் வெளிப்படுகளாகவே அவரது கதைகள் விளங்கின. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் ஐந்து நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.
நூல்கள்
- முடிவைப் பார்த்தா கதை சொன்னேன் ( சிறுகதைகள்)
- ஒரு மணிப்பொழுது (சிறுகதைகள்)
- யாருக்கோ கட்டிய வீடு (குறு நாவல்)
- திடீரென்று (நாவல்)
- உறுதுணை தேடுமின் ( நாவல்)
- பரிமளவல்லி (நாவல்)
- கோகிலா இப்போது இங்கே இல்லை ( நாவல்)
- நிலம் நீர் காற்று (நாவல்)
- மாயபிம்பம் (நாவல்) வெளிவர இருக்கும் நாவல் (மே 2018)
படைப்பிலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து இயங்கிவருபவர். இவரது எழுத்துக்கள் எல்லாம் உலகளாவிய மனிதனின் சிக்கல்களை முன்வைத்துப் பேசுபவை. இவரது நிலம் நீர் காற்று நாவல் சமகால உலகச் சிக்கலான வணிகமயமாதலையும் அதில் சிக்கிச் சிதையும் மனிதர்களையும் பற்றிய கருத்துக்களை முன்வைப்பவை. அந்நாவலில் எப்படி இயற்கை சூரையாடப்பட்டு டாலர்களாகிறது என்பதையும் அதற்கு எதிர்முனையில் எப்படி நன் நம்பிக்கை முனையாக இயற்கை விவசாயத்தின் பக்கம் எப்படி ஒரு சிலர் எழுந்து நிற்கிறார்கள் என்பதையும் உருவாக்கிக் காட்டிய நாவல்.
அமர்நாத் தன் படைப்புலகம் குறித்து
எண்ணற்ற கற்பனைக் கலைஞர்களின் எழுத்துக்களை ரசிக்கும் எல்லாருக்குமே தங்களுடைய எழுத்துக்களையும் வெளிப்படுத்த வேண்டும் என்கிற ஆவல் எழுவது இயற்கை. என் ஆசை அறிவியல் தொழிலால்பல ஆண்டுகள் தள்ளிப்போடப்பட்டு ஒருவழியாக "இந்தக் கடிதம் கிடைத்த..." என்ற சிறுகதையில் நிறைவேறியது. அத்துடன் என் இலக்கிய சாதனை நின்று இருக்கும். அப்படி நிகழாமல் எஸ். ஷங்கரநாராயணன் என்னை ஊக்குவித்து புதினப்பாதைக்கு வழியும் காட்டினார். ஆரம்ப சிறுகதைகளில் 'ஒருமணிப்பொழுது' தொகுப்பின் ஒருசில கதைகளாவது வாசகர்களின் சிந்தனையைத் தூண்டும் என்ற நம்பிக்கை.
பலமுறை மனதில் வாழ்ந்து பார்த்த சம்பங்களைக் கோர்த்து எழுதப்பட்ட என் முதல் நாவல் 'திடீரென்று'. உணர்ச்சிக்குவியலான அதற்குக் கிடைத்த வரவேற்பு 'உறுதுணை தேடுமின்' என்ற இரண்டாவது நாவலை எழுதத்தூண்டியது.
அறிவியலில் பரவலான, வேதியியலில் சிறப்பான என் அறிவை பயன்படுத்துவது என்னுடைய நோக்கம். சயன்ஸ் ஃபிக்ஷன் கிட்டத்தட்ட ஃபேன்டஸியாக மாறிவிட்ட இக்காலத்தில், என் கற்பனை விஞ்ஞான கோட்பாடுகளை மீறுவது இல்லை. புதிய கண்டுபிடிப்புகள் எப்படி மக்களை பாதிக்கும் என்பதை மனதில் வைத்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பது ~பரிமளவல்லி|யின் மறைபொருள். கதை கற்பனை யென்றாலும், கதைக்குப் பின்னணியாகஎன் சொந்த ஆராய்ச்சியில் கண்டறிந்த நிஜமான முடிவுகளையே பயன்படுத்தினேன்.
'கோகிலா இப்போது இங்கே இல்லை' ஒரு பெண்ணின் வெற்றிக்கதை. அதிலும் தீவிரவாதத் தாக்குதலை வேதியியல் அறிவு தவிர்க்கிறது.
இயந்திரமயமாக்கப்பட்ட சமுதாயத்தில் தனித்துவத்தைக் கண்டுபிடிப்பது ஒரு சவால் என்பதைக் காட்டும் குறுநாவல்'யாருக்கோ கட்டிய வீடு'.
மனிதனை எதிர்நோக்கியுள்ள பல பிரச்சினைகளை எழுத்தாளர்கள் கையாளுவது இல்லை என்பது அமிதவ் கோஷ் என்ற நாவலாசிரியரின் குறை. தமிழில் அதை நிவர்த்திக்கும் முறையில் எழுதப்பட்டது 'நிலம் நீர் காற்று'. மழைநீரை சேமித்து நிலத்தடி நீரையும் ஏரிகளின் மட்டத்தையும் உயர்த்தும்சேவையில் ஈடுபட்ட ஒருவனும், தண்ணீர் தட்டுப்பாட்டை வைத்து பணம் பண்ணிய ஒருவனும் சந்திப்பது அந்நாவலின் பிரதான காட்சி.
