வெல்லும்
சொல் வெளியீடாக வரயிருக்கும் அமர்நாதின் ‘மாயபிம்பம்’ நாவலின் ஒரு பகுதி
மாயபிம்பம் – நாவல்
அமர்நாத்
முதல் மாதத்தை
விட இரண்டாவது வேகமாகப் போய்விட்டது.
இத்தனைக்கும் அக்டோபரில் கூட ஒருநாள். மறுநாள் சம்பளம் வந்ததும் இரண்டு மாதம் சேர்த்த
பணத்திலிருந்து ஆன்டர்சன் பெயரில் நானூறு டாலருக்கு செக் வாங்கி அனுப்பிவிட்டால் கடனை
அடைத்த நிம்மதி வரும். அப்பென்டிக்ஸ் வெட்டிய சிகிச்சைக்குப் பின் ஏவ்ரம் நான்குநாள்
படுக்கையில் முழு ஓய்வு எடுத்தான். பிறகு ஒருவாரம் பாதிநாள் வேலை. கடைக்குப் போவது,
சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது எல்லாம் அருளின் பொறுப்பு. இப்போது கிட்டத்தட்ட சாதாரண
நிலை.
அன்று ஹலோவீன்.
அது பேகன்களின் பண்டிகை என்பது பாஸ்டோரலின் கொள்கை. பிசாசுகளையும், பூதங்களையும் சிறப்பிக்கும்
விரும்பத் தகாத வழக்கம். அதே சமயம் வித்தியாசமாக இருக்கக் கூடாது என நுழைவாயிலை ஒட்டிய
திறந்தவெளியில் பிற்பகல் நான்குமணிக்கு ஒரு கொண்டாட்டம். ஏழெட்டு ஸ்டால்கள். பல்கலைக்
கழகத்தைச் சுற்றி வசிக்கும் குழந்தைகள் மாறுவேடங்களில் திரிந்தார்கள். அன்றைய ஆண்டு
பெண்களுக்கு பிரபலமான வேஷம் போகஹான்டாஸ். பையன்களுக்கு நிஞ்சா ஆமைகள். ஒரு ஸ்டாலில்
ரவியும் அருளும். சிறுவர்கள் வெறுமனே ‘ட்ரிக் ஆர் ட்ரீட்!’ சொன்னால் மட்டும் போதாது.
ரவி கேட்ட கேள்விக்கு சரியாக பதில் சொன்னால், அருளிடமிருந்து ஒரு நீள ஹெர்ஷி. தவறாகச் சொன்னால், சரியான பதிலுடன் அதே
ஹெர்ஷி பரிசு.
“இயேசு கிறித்துவுக்கு
எத்தனை சீடர்கள்?”
“அவர்களில்
அவருக்கு யாரை அதிகம் பிடிக்கும்?”
“சொர்க்கத்தில்
இயேசு (பைபிள்) கடவுளுக்கு எப்பக்கம் அமர்ந்திருக்கிறார்?”
ஐந்தரை மணிக்கு
ரவியும் அருளும் கடைகட்டினார்கள். மீந்துபோன இனிப்புகளை திருப்பிக் கொடுக்க மாணவர்
மையம் நோக்கி ஒரு நடை.
“உன் ரூம்மேட்டின்
மனமாற்றம் எப்படிப் போகிறது?”
“ம்ம்ம்.
நிறைய விவாதிக்கிறோம், ஒருவன் மற்றவனின் சிந்தனையைத் தூண்டுகிற மாதிரி. ஆனால், அவன்
இம்மியும் நகரக் காணோம்.”
“சரி, தொலைகிறான்
விடு! இன்னும் ஒரு மாதம்தான் அவன் சகவாசம்.”
அதற்குப்
பிறகும் முடிந்தபோது ஏவ்ரமை சந்தித்து உரையாட அருளுக்கு ஆசை.
“அவன் உன்னை
மாற்றிவிடப் போகிறான். எதற்கும் ஜாக்கிரதையாக இரு!”
“ஹ! அது
மட்டும் நடக்காது.”
“சரி! இயேசு
பற்றிய ஆராய்ச்சி எங்கே நிற்கிறது?”
“வரும் புதனுக்கு
அடுத்த புதன்கிழமை, இஸ்ரேலில் இருந்து ஆர்டீஸ் திரும்பி வருகிறார். அதற்குள் ஒரு அவுட்லைன்
எழுதப் பார்க்கிறேன்.”
“பரவாயில்லையே!”
“எனக்கு
நேரம் நிறைய. படிக்கவும் பிடிக்கும்.”
“இப்போது
என்ன படிக்கிறாய்?”
“முதல் நூற்றாண்டு
ரோம ஆட்சியின் சமுதாய அமைப்பு பற்றி. ஆர்டீஸ் பரிந்துரைத்த புத்தகங்களில் அதுவும் ஒன்று.
பொடி எழுத்தில் அறுநூறு பக்கமாவது இருக்கும். இயேசுவை நன்கு அறிய அது உதவுகிறது.”
“அத்தனை
சிரமம் எதற்கு? லூயிஸைப் படித்தால் போதுமே.”
“எந்த லூயிஸ்?
‘க்ரானிக்ல்ஸ் ஆஃப் நார்னியா’ எழுதியவரா?”
“அவரேதான்.
சி. எஸ். லூயிஸ் சிறு வயதில் நாத்திகர். கடவுளைத் தேட உலக மதங்கள் அத்தனையும் ஆராய்ந்து,
கடைத்தேற ஒரேவழி கிறித்துவம்தான் என்ற முடிவுக்கு வந்து அதைப் பின்பற்றியவர். அவருடைய
‘மியர் க்றிஸ்டியானிடி’ ஒரு அற்புத படைப்பு! அதன் முதல் அத்தியாயத்தை மட்டும் படித்து
கிறித்துவை நம்பத் தொடங்கிய நாத்திக விஞ்ஞானிகள் எத்தனையோ பேர்!”
“படித்துப்
பார்க்கிறேன்.”
“அப்புத்தகத்தில்
இயேசு கிறித்து யார் என்பதை அவர் அறிவுபூர்வமாக நிரூபிக்கிறார். ஏப்ரஹாமுக்கும் முந்தியே
நான் இருந்தேன், பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே, என் வழியாகத்தான் மனிதர்களுக்கு
உய்வு - என்று இயேசு சொன்னதை எல்லாம் கூட்டிப்பார்த்தால் அவர் பைத்தியமாகவோ, பொய்யராகவோ,
இல்லை கடவுளாகவோ தான் இருக்க முடியும். ஜெருசலம் கோவிலில் பன்னிரண்டு வயதிலேயே மெத்தப்
படித்தவர்களை தன் ஞானத்தால் வியக்கவைத்த ஒருவர் நிச்சயம் பைத்தியமாக இருக்க முடியாது.
காஸ்பெல் சொல்வது அத்தனையும் நிஜம், உண்மையைத்தவிர வேறு இல்லை, என்று லூக் ஆரம்பத்திலேயே
உறுதி தருவதால் இயேசு சொன்னது பொய் இல்லை. அதனால், அவர் கடவுளாகத்தான் இருக்க முடியும்”
என்று ரவி அழுத்திச் சொன்னான்.
“ஆக... இயேசுபிரான்
பித்தன், பித்தலாட்டக்காரன், அல்லது பிரபு என்கிற மூன்று சாய்ஸ்தானா எனக்கு?”153 மாயபிம்பம்
“அது போதாதா?
அவர் வேறு யாராக இருக்கமுடியும்?”
அருள் ஒருகணம்
யோசித்தான்.
“நற்செய்தி
ஜான் இயேசுவின் வாழ்க்கை முடிந்து எழுபது எழுபத்தைந்து ஆண்டுகள் கடந்தபிறகு தான் எழுதப்பட்டது.”
அந்த வரலாற்றுத்
தகவல் சரியென்று எப்படிச் சொல்லமுடியும்?
“அதன்
8:1-8:11 உனக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.”
“படித்திருக்கிறேன்.”
“அப்பகுதி
பிற்காலத்தில் எழுதி சேர்க்கப்பட்டதற்கு ஆதாரம் இருக்கிறது. வரலாறு இல்லை யென்றாலும்
சம்பவம் நிஜமாக நடந்திருக்கக் கூடும். என் நோக்கில்... இயேசு யார் என்பதை அது தெளிவாகக்
காட்டுகிறது. இயேசு கோவிலில் சமநீதி போதிக்கிறார். அப்போது, யூத அதிகாரிகள் ஒரு பெண்ணை
இழுத்துவந்து இயேசு முன் நிறுத்தி ‘இவள் சோரம் போய்விட்டாள், இவளை என்ன செய்வது?’ என்று
கேட்கிறார்கள். இது அவரை மாட்டிவைக்கும் சூழ்ச்சி. இயேசு ‘அவள் செய்த பாவத்துக்கு சரியான
தண்டனை அவளை கல்லால் அடித்துக் கொல்வது’ என்றால் அவர் போதித்த அன்பு, கருணை, மன்னிப்பு,
எல்லாம் அர்த்தமற்றுப் போய்விடும். ‘பாவம்! ஆதரவற்ற அபலை. தவறு செய்யாதவர்கள் இவ்வுலகில்
யார்? போனால் போகிறது, தயவுசெய்து அவளை விட்டுவிடுங்கள்!’ என்றால் (பைபிள்) கடவுள்
சொல்லித்தர மோசஸ் இயற்றிய சட்டம் அவருக்குத் தெரியவில்லையே, தெரிந்தாலும் அதைக் கடைப்பிடிக்க
வில்லையே என்ற அவச்சொல் வரும். இயேசு இக்கட்டை எப்படி சமாளிக்கிறார்? ‘உங்களில் எவன்
பாவம் செய்யவில்லையோ அவன் முதல் கல்லை அவள் மேல் வீசட்டும்’ என்று சொல்லிவிட்டு குனிந்து
தரையில் கிறுக்குவதுபோல் பாவனை செய்கிறார். ஒவ்வொருவராக பழிசுமத்தியவர்கள் அகன்றதும்
நிமிர்ந்து ‘உன்னைப் பழிக்க யாரும் இல்லையா?’ என்று அந்தப் பெண்ணைக் கேட்கிறார். ‘இல்லை
ஐயா!’ என்கிறாள் அவள். ‘நானும் உன்னைப் 154 அமர்நாத்
பழிப்பதாக
இல்லை. இனி நல்லபடியாக நட!’ என்று அறிவுரை சொல்லி அனுப்புகிறார். இந்த சம்பவத்தில்
இயேசு தன் பெயரை மட்டுமல்ல, அந்தப் பெண்ணின் உயிரையும் காப்பாற்றிவிடுகிறார். என்ன
சாமர்த்தியம்!”
ரவிக்கு
சந்தேகத்தில் வரும் குழப்பம். அருள் சொன்ன விளக்கத்தில் குற்றம் குறை இல்லாவிட்டாலும்
ஏதோ உதைத்தது. நற்செய்தி ஜான் நிஜமான வரலாறா, இல்லை கற்பனை கலந்ததா? கிறித்துவை கடவுள்
என்று அவன் ஏற்கிறானா, இல்லையா? உதவி ப்ரோவோஸ்ட் நெட்டில்ஸிடம் அருளின் மனப்போக்கை
எச்சரிக்க நினைத்தான். பிறகு, இன்னும் கொஞ்ச காலம் பொறுத்துப் பார்க்கலாம் என்று மனதை
மாற்றினான். எப்படியும் இரண்டு வாரத்தில் அருளின் மென்டோர் திரும்பி வருகிறார். அவன்
அறிக்கையைப் படித்துவிட்டு அவரே ஒரு முடிவு எடுக்கட்டும். எதற்கும், தவறான பாதையில்
அருள் வெகுதூரம் போவதற்கு முன் அவனை இழுத்துப் பிடிக்க...
“என்னைக்
கேட்டால், நீ ‘மியர் க்றிஸ்டியானிடி’யை இப்போதே படிப்பது நல்லது. தள்ளிப் போடாதே! என்னிடம்
ஒரு பிரதி இருக்கிறது. தரட்டுமா?” என்றான்.
“வேண்டாம்!
எனக்கு புத்தங்கள் சேகரிக்கப் பிடிக்கும். நானே வாங்குகிறேன்.”
“லூயிஸின் ‘மிரக்ல்ஸை’யும் சேர்த்துக் கொள்! அறிவியல்
தத்துவம் படித்த நீ அற்புதங்கள் நிகழாது என நம்பலாம். அப்புத்தகம் உன் மனதை மாற்றிவிடும்.”
மாணவர் புத்தகக்கடைக்குப்
போய் இரண்டு புத்தகங்களையும் அருள் வாங்கியதைப் பார்த்தபிறகே ரவி அவனிடமிருந்து விடைபெற்றான்.
வியாழன் உயிரியல்
உதவி வகுப்பு. பிரதான வகுப்பில் முடிக்கப்பட்ட பாடத்தை அன்று அருள் கால்மணிக்குள் விளக்கிவிட்டான்.
மீதி நேரத்தை வீணாக்காமல் அடுத்த பாடத்துக்கு முன்னுரை. டேவிட் டாதே எழுதிய ‘ஹிஸ்டாரிகல்
ஜியாலஜி’ என்ற புத்தகத்தில் இருந்து இரண்டு நாட்களாக சேகரித்த விஷயங்களின் சுருக்கம்.
உயிரினங்களின் வரலாறு
சரித்திரத்தின் முதல்படி காலக்கணக்கு. இரண்டு நிகழ்வுகளில்
எது முன்னது, எது பிந்தையது என்று அறிவது அவசியம். பிரமிட்கள், பார்த்தனான் கோவில்,
ரோம விளையாட்டு அரங்கு - இவை இவ்வரிசையில் இந்தந்தக் காலங்களில் கட்டப்பட்டன என்று
பல பதிவுகளை ஆராளிணிந்து வரலாற்றாசிரியர்கள் நிர்ணயித்து இருக்கிறார்கள். அதுபோல, மரங்களின்
குறுக்கு வட்டங்கள் மற்றும் பவளத்தின் மேல்வரிகள், இவற்றைவைத்து அவை தோன்றிய
காலத்தை அறியலாம். வரலாற்றுக்கு முந்தைய கற்களின் வயதை அளவிடவும்
வழிகள் இருக்கின்றன. பாறைப் படிவங்களில் காலத்தில் முற்பட்டது அடியிலும், பிற்பட்டது
மேல் மட்டத்திலும் அமைந்திருப்பதை பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே அறிஞர்கள் கவனித்தார்கள்.
ஜுராஸிக் சமீபத்திய காலம், கேம்ப்ரியன் மிகப் பழமையானது என்றாலும் அவற்றின் வயது ஆண்டுக்
கணக்கில் யாருக்கும் சரிவரத் தெரியாது. கதிரியக்கம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு எரிகற்களின்
வயதை நிர்ணயிக்க முடிகிறது. அதற்குப் பரவலாக பயன்படுத்தப்படும் தனிமம் பொட்டாஷியம்-40.
இது சிதைந்து ஆர்கான் வாயுவாக மாற பல பில்லியன் ஆண்டுகள் ஆகின்றன. இரண்டின் அளவுகளையும்
ஒப்பிட்டு கல்லின் வயது கணக்கிடப்படுகிறது.
இது சரியான முறை என்று எப்படித் தெரியும்?
ஒரு எரிகல்லில் ஒன்றுக்கு மேற்பட்ட கதிரியக்கத் தனிமங்கள்
இருந்து அவற்றை அளவிடும்போது ஏறத்தாழ ஒரே வயதுதான் அறியப்படுகிறது. பல ஆளிணிவுக் கூடங்களின்
முடிவுகளும் தங்களுக்குள் ஒத்துப் போகின்றன. ஒரு எரிகல்லுக்குள் இன்னொரு எரிகல் புகுந்திருந்தால்,
பின்னது வயதில் குறைவாக இருக்கும் என எதிர்பார்ப்போம். கதிரியக்க சிதைவிலும் அதைத்தான்
காண்கிறோம்.
சலவைக்கல், சுண்ணாம்பு போன்ற படிவுக் கற்களின் வயது?
அதை இம்முறையில் நேரடியாக அளக்க வழியில்லை. அவற்றை ஒட்டிய
எரிகற்களின் வயதுகளிலிருந்து தோராயமாக அது அறியப்படுகிறது.
எலும்புகளின் வயது?
கார்பன்14 உயிரினம் உயிர்வாழும்போது அதன் உடலில் தங்குகிறது,
இறந்ததும் சிதைகிறது. மிச்சமிருக்கும் கார்பன்14 மூலம் எலும்புகளின் காலத்தை நிர்ணயிக்கலாம்.
ஆனால், ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகளில் கார்பன்14 கிட்டத்தட்ட மறைந்து
விடுவதால் இவ்வழி உதவாது. அவை புதைந்த கற்களிலிருந்து அவற்றின் காலம் கணக்கிடப் படுகிறது.
முடிவுகள் எவ்வளவு நிச்சயம்? கணக்கில் பிழைகள் ஏற்படலாம்
இல்லையா?
சந்தேகம் இல்லாமல், எந்த அளவிடும் முறையிலும் நிச்சயமின்மை
இருப்பது இயற்கை. அதனால்தான் ஒன்றுக்குப் பலமுறை அளக்கிறோம். இரத்தத்தில் கொலஸ்டராலின்
அளவை நூற்றியறுபதுக்கு மேல் நூற்றியெழுபதுக்குள் (மில்லிகிராம்) என்று இரு வரம்புக்குள்
குறிப்பிடுகிறோம். அதனால், அது தவறு என்று ஆகாது. அதுபோல, டைரானாசாரஸ் ரெக்ஸ் வாழ்ந்த
காலம் அறுபத்தியெட்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் என்று சொல்லும்போது ஒருசில மில்லியன்
கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம் தான்.
அருள் பேசிமுடித்து மாணவர்களின் கேள்விகளுக்குக் காத்திருந்தான்.
சில நிமிடங்களின் அமைதி. அதிர்ச்சியால் வந்த நிசப்தம்.
மாணவர்கள் சார்பில் ஸ்டேசி சந்தேகம் கிளப்பினாள். எப்போதும்போல்
உச்சியிலிருந்து தழைந்த இரட்டைப்பின்னல்.
“நீ சொல்லும் காலம் மில்லியன் கணக்கில் ஓடுகிறது. பூமியின்
வயது ஆறாயிரம் ஆண்டுகள்தானே.”
“அது எப்படி அறியப்பட்டது என்று சொல்கிறேன். முன்னூற்றி ஐம்பது
ஆண்டுகளுக்கு முன் அயர்லாந்தைச் சேர்ந்த பிஷப் உஷர் போட்ட கணக்கு. பாபிலோன் அரசர் நெபுகட்நெஸர்
முற்காலம் 597-இல் இறந்ததாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன. அது ஜுடாவின் அரசன்
ஜெஹோசின் நாடு கடத்தப்பட்ட முப்பத்திஏழாவது ஆண்டு (2 அரசர்கள் 25:27) என பைபிள் குறிப்பிடுகிறது.
அதில் தொடங்கி இஸ்ரேலை ஆண்ட அரசர்களின் ஆட்சிக் காலங்களைக் கூட்டி ஏப்ரஹாம் முற்காலம்
2200-இல் வாழ்ந்ததாக நினைத்தார். ஆதாமில் இருந்து ஏப்ரஹாம் வரையிலான ஆண்கள் பாரம்பரிய
வரிசையையும், ஒவ்வொருவருக்கும் மூத்தமகன் எப்போது பிறந்தான் என்ற
விவரத்தையும் பைபிள் தருகிறது. (950 ஆண்டுகள் வாழ்ந்த நோவாவுக்கு
அவன் ஐநூறு வயதானபோது முதல் பிள்ளை பிறந்தான் - படைப்பு 5:32) காலத்தில் பின்னோக்கிச்
சென்று, ஆதாமை (பைபிள்) கடவுள் படைத்தது முற்காலம் 4004 என்று அவர் கணக்கிட்டார்.”
“இரண்டு எண்களில் எது சரி?”
இரண்டு முறைகளையும் விளக்குவது என் கடமை. அவற்றைப் புரிந்துகொள்வது
உங்கள் அறிவு வளர்ச்சிக்கும், நான் கொடுக்கப்போகும் தேர்வுக்கும் அவசியம்.
“உன் சொந்த அபிப்பிராயம் என்ன?”
“அதைச் சொல்லி உன் கருத்தை நான் மாற்றுவது நியாயம் இல்லை.
நீயாகவே இரண்டு முறைகளையும் ஒப்பிட்டு எது ஏற்கத் தக்கது என்று தீர்மானிக்க வேண்டும்ஞ்”
ஸ்டேசி விடுவதாக இல்லை.
“பைபிளின் ஆறாயிரம் ஆண்டுக் கணக்கு எப்பவும் மாறவே மாறாது.
ஆனால், அறிவியல் மதிப்பீடு அப்படி இல்லை. சென்ற நூற்றாண்டில் லார்ட் கெல்வின் இருபது
மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உலகம் தோன்றியதாகக் கணக்கிட்டார். இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில்
உலகின் வயது ஒரு பில்லியனாக இருந்தது. தற்போது நாலரை பில்லியன். இப்படி எண்களை அடிக்கடி
மாற்றிக்கொண்டே இருக்கும் விஞ்ஞானத்தை எப்படி நம்புவது?”
“ஏர்லை ஸ்டேசி நன்றாக மாட்டிவிட்டாள். அவளிடம் பேசி ஜெயிக்க
முடியுமா?” என்று சந்தோஷப்பட்டான் ரவி,
அருள் சில நொடிகள் யோசித்து ”வாடவே வாடாத காகிதப்பூ. வாசம்
வீசி, வண்டுகளைக் கவர்ந்து, ஒரு நாளில் வாடி கனியாக மாறும் மலர். இரண்டையும் ஒப்பிட
முடியுமா? அது போலத்தான்” என்றான்.
அருளின் சாமர்த்திய பதிலைக் கேட்டு ”சும்மா சொல்லக்கூடாது,
பயல் நன்றாகவே சமாளிக்கிறான்” என்று ரவி பாராட்டினான்.
வகுப்பு கலைந்தது.
ஒவ்வொரு வியாழனும் பிற்பகல் மூன்று மணிக்கு லீடர்ஷிப் செமினார்.
ஜோன்ஸ் ஹாலை ஒட்டிய பிருமாண்டமான அரங்கில். ஆராளிணிச்சி மாணவர்களும், இறுதி ஆண்டு இளங்கலை
மாணவர்களும் கட்டாயம் ஆஜராக வேண்டும். விருப்பப்பட்டால் மற்றவர்களும் கலந்துகொள்ளலாம்.
படித்த பிறகு மாணவர்கள் கிறித்துவத்தில் மட்டுமின்றி, அரசியல், அறிவியல், வணிகம் என்று
எல்லாத் துறைகளிலும் முன்நின்று மற்றவர்களை வழிநடத்த வேண்டும் என்ற நோக்கில், சமுதாயத்தில்
சாதனை புரிந்தவர்களின் சொற்பொழிவுகள்.
அதுவரை பேசிய சிலரும், அவர்களின் உரையும்... பெண்களின் ஒழுக்கத்தைக்
கெடுக்கும் கருத்தடைக்கு சட்டப்படி தடைபோட முயற்சிக்கும் காங்கிரஸ் அங்கத்தினர் எலிஸபெத்
ப்ரௌன், அமெரிக்கப் பல்கலைக் கழகங்களின் சமயசார்பற்ற கல்வியை எதிர்க்கும் வில்லியம்
பக்லி, எல்லா நாடுகளையும் ஒரே மட்டத்தில் வைக்கும் ஐக்கியநாடுகள் சபையிலிருந்து யு.எஸ்.
விலகுவதை வலியுறுத்தும் ஜான் போல்ட்டன்.
இரண்டரைக்கு அருள் தன் மேஜையிலிருந்து எழுந்தான். நீண்ட நேரம்
பொடி எழுத்துகளைப் படித்ததாலோ என்னவோ காற்றாட நடக்க வேண்டும்போல் இருந்தது. சாலைவழியே
போகாமல் பேலி ஹாலின் பின்புறத்து மரங்களின் நடுவே நடந்தான். ஒரு மரத்தில் கிட்டத்தட்ட
எல்லா இலைகளும் செம்மை படர்ந்து தீயில் எரிவதுபோல் தோன்றின. அதன் அழகை ரசித்தபடி நின்றான்.
அவன் கண் எதிரிலேயே ஒரு இலை உதிர்ந்து தரையில் விழுந்தது. அதைக் கையில் எடுத்து அதிசயமாகப்
பார்த்தான். அதன் காலம் முடிந்துவிட்டது.
அருளுக்கு மரணத்தைப் பற்றிய சிந்தனை. ஆனால், அது அப்போது
அச்சத்தையோ, அதிர்ச்சியையோ தரவில்லை. மிருகத்துக்கு என்ன நேர்கிறதோ, அதுவே மனிதனுக்கும்.
ஒன்று இறப்பது உண்மையென்றால் மற்றதுக்கும் அதே கதி என்கிற பைபிளின் தத்துவ மனப்பான்மை.
உயிர்கள் அனைத்துக்கும் சுவாசம் ஒன்றுதான். மனிதன் எவ்விதத்திலும்
மிருகங்களைக் காட்டிலும் உயர்ந்தவன் அல்ல, அவன் எவ்வளவு தம்பட்டம் அடித்தாலும். கடைசியில்,
எல்லாரும் போகும் இடமும் ஒன்றுதான்.
- பிரசங்கியார் 3:19
ஆனால், அதற்குமுன் நிறைய சாதிக்க வேண்டும் என்ற உந்துதல்.
பின்னோக்கிப் பார்த்தான். முதன்முறை சந்தித்தபோது ஏவ்ரம் புகழ்ந்ததுபோல் பரந்த அறிவு,
கட்டுப்பாடான ஒழுக்கம், அளவான ஆசைகள் என்று வாழ்க்கைக்கு நல்ல அஸ்திவாரம் போட்டிருக்கிறான்.
இனி அதன்மேல் பலருக்கு உபயோகமான கட்டடம் எழுப்ப வேண்டும். அதுதான் அவன் குறிக்கோள்.
கட்டி முடித்ததும், எல்லா உயிரினங்களையும் போல, எந்தப் புழுதியில் இருந்து தோன்றினானோ
அதே புழுதிக்கு அவன் திரும்பி விடுவான். அவன் விட்டுச் செல்லும் எச்சம்தான் அருள் ஆனந்தம்
என்று ஒருவன் இவ்வுலகில் வாழ்ந்தான் என்பதற்கு அத்தாட்சி.
இந்த கருத்தில் ஒரு சமய சிற்றுரை புனைந்தால்...
மாயபிம்பம் (நாவல்)
வெல்லும் சொல் வெளியீடு
ஜூன் வெளியீடு
பக்கங்கள் : 896 , Hard Binding விலை
: 800/-
முன்பதிவு விலை ( ஜூன் 15 வரை) ரூ
550/-